நம்பிக்கை வாசல் டிரஸ்ட் மற்றும் வாசகன் பதிப்பகம் இணைந்து நடத்திய 25 நூல்கள் வெளியீடு, சமூக ஆர்வலர்கள் கௌரவிப்பு, வாசகன் நாயக்ர் விருதுகள் வழங்கல், நம்பிக்கை வெளிச்சம் ஆவணப்பட வெளியீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆகிய ஐம்பெரும் விழா சேலம் மூவேந்தர் அரங்கில் ஞாயிறு (3012.2018) அன்று நடைபெற்றது.
கவிஞர் ச.கோபிநாத் வரவேற்புரையாற்றினார். விழாவுக்கு மனவளக்கலை மன்ற மண்டலத் தலைவர் உழவன் மா.தங்கவேலு தலைமை வகித்தார்.
ஆடிட்டர் ஏ.பி.நாச்சிமுத்து, திருப்பூர் மாவட்ட சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை திருமதி என்.கிருஷ்ணவேணி, டைம்ஸ் ஆப் இந்தியா சேலம் மண்டல சிறப்புச் செய்தியாளர் வி.செந்தில்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்களும், சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்கள், “பதிப்பக உலகில் வாசகன் பதிப்பகம் தனி முத்திரையோடு செயலாற்றி வருகிறது. வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருப்பதே இதற்கு சான்று. இதேபோல் கவிஞர் ஏகலைவன் படைப்பாளராக இருந்து பதிப்பாளராகவும் சிறப்பு செயல்பட்டு வருகிறார். தான் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளை சாதிக்க ஊக்குவிக்கும் இவர், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளிகளையும் உலகுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நல்ல பணியை செய்து வருகிறார். இவரது சாதனை பயணத்தின் மைல்கல்லாக விளங்குவது தான் நம்பிக்கை வாசல் டிரஸ்ட். இந்த டிரஸ்ட்டின் மூலமாக பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. இத்தகைய நல்ல பணிகளில் நாமும் நம்மை இணைத்துக் கொள்வதே சமூகம் மேம்பட நாம் செய்ய வேண்டிய நற்பணி ஆகும்” என்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றிய சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்,“சமூகம் நலம் பெற வேண்டுமெனில் நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும். அத்தகைய நல்ல படைப்புகளை சமூகத்திற்கு தருபவர்களே படைப்பாளிகள். அந்த படைப்பாளிகள் படைக்கும் நூல்களை வாசிப்பதும், அவர்களின் படைப்புகளை பாராட்டுவதும் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும். அப்போது தான் சமூகம் தழைக்க நல்ல கருத்துகள் நாளும் மலரும். அதேபோல் மனிதர்களுக்கு நம்பிக்கை அவசியம். மனித வாழ்வை சாதனையை நோக்கி இட்டுச்செல்லும் மூலமந்திரம் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு நாம் வாழ்வை அணுகினால் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம். உடலியல் தடைகளைத் தாண்டி மாற்றுத்திறனாளிகள் சாதிக்க முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய சாதனைகள் தான் அவர்களது அடையாளங்களாக விளங்கும். அப்படி சாதிக்க முயலும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பை ஆதரிப்பது சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாக கருதுகிறேன்.” என்று பேசினார்.
மாற்றுத்திறன் சாதனையாளர்களுக்கான் வாசகன் நாயகர் விருது திரு. கே. சக்திவேல் அவர்களுக்கும் ஜனாப் சாம்சோ நூர்தீன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த நூல்களை படைத்த மாற்றுத்திறன் படைப்பாளிகளுக்கான வாசகன் படைப்பிலக்கிய விருது 15 மாற்றுத்திறன் படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தையல் மிஷின், இஸ்திரி பெட்டி ஆகியவற்றை எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்கள் வழங்கினார்.
விழாவில் பல்வேறு படைப்பாளிகளின் 25 நூல்களை சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் வெளியிட முக்கிய பிரமுகர்கள் பலரும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழல் குறித்த “நம்பிக்கை வெளிச்சம்” ஆவணப்படம் வெளியிடப்பட்டு, விழா அரங்கில் திரையிடப்பட்டது.
விழாவை பேராசிரியர் சிவராஜ் தொகுத்து வழங்க, நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பொருளாளர் திரு. எஸ்.கார்த்திக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.