நம்பிக்கையின் முகவரி

“நம்பிக்கை அதானே எல்லாம்…” என்று விளம்பரங்களில்  ஒரு வாசகம் வரும். அந்த வாசகம் அல்ல வாழ்க்கைக்கான தத்துவம். நம்பிக்கை மட்டுமிருந்தால் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கலையும் கடந்து சாதனை படைக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த சரியான திட்டமிடல்களுடன் செயலாற்றி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மாற்ற நம்பிக்கையோடு செயலாற்றி வருகிறது சேலத்தில் இயங்கி வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட். ஆதரவற்றோர், ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலவகைகளில் சமூகநலனுக்காக செயலாற்றி வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தன் டிரஸ்ட் சார்ந்த பணிகள் குறித்து இந்த நேர்காணலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்…

  1. நம்பிக்கை வாசல் டிரஸ்ட் உருவானது ஏன்? எப்படி? எப்போது?

மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனையோ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனினும், அவற்றில் பெரும்பான்மையானவை உடல் நலமுள்ளவர்களால் நடத்தப்படுவதால், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் சரிவர உணரப்படுவதில்லை என்பதும், கிடைக்கும் உதவிகள் சரியானபடி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்கிற ஆதங்கத்தினாலும் உருவானதே இந்த அமைப்பு.

சகமாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ஏகலைவன் என்னும் மாற்றுத்திறனாளியால் நடத்தப்படுகிறது நம்பிக்கை வாசல் டிரஸ்ட் என்பதை இவ்வமைப்பின் சிறப்பம்சமாக குறிப்பிட நினைக்கிறேன்.

25.8.3013ல் சென்னை ஶ்ரீமாதா ட்ரஸ்ட் நிறுவனர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் அமைப்பின் கௌரவ ஆலோசகர்களாக கலைமாமணி லேனா தமிழ்வாணன் மற்றும் சொல்வேந்தர் கலைமாமணி சுகிசிவம் ஆகிய இருவரும் எங்கள் அமைப்புக்கு பக்கத்துணையாக இருந்து வழிகாட்டுகின்றனர்.

  • ஏகலைவனான உங்களைப் பற்றி…

நான் ஏகலைவன், சிறுவயதில் ஏற்பட்ட ரயில் விபத்தொன்றில் எனது காலையும் ஒரு கை விரலையும் இழந்தேன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் என் மனதிலிருந்த நம்பிக்கை ஜெயித்தது. அந்த நம்பிக்கையின் துணையுடன் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று லாட்டரி சீட்டு விற்பவராக, டைலராக, பலகலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாரளாக என பல்வேறு பணிகளை செய்து வந்தேன். தமிழகமெங்கும் உள்ள மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் சாதனைகளை புத்தகங்களாக எழுதி வெளியிட்டிருப்பதுடன், எனது படைப்புகளான கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள் ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறேன்.

பல்வேறு படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிடும் பதிப்பாசிரியராக வாசகன் பதிப்பகம் என்ற பதிப்பகத்தையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வந்ததுடன், பரிசுகள் பெற்ற பல்வேறு நூல்களையும் வெளியிட்டுள்ளேன். அதிலும் பெரும்பான்மையானவை மாற்றுத்திறனாளிகளுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாற்றுத்திறனாளியான நான் பல்வேறு மாற்றுத்திறனாளிகளை சந்தித்திருப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நன்கு உணர்ந்துள்ளேன். அந்த எண்ணம் தான் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தோன்ற மிக முக்கிய காரணமாக இருந்தது.

  • நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நோக்கம்…

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வியல் தேவைகளை தாங்களே எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கை உள்ள மனிதர்களாக அவர்களை தயார்படுத்த வேண்டும் என்கின்ற உயரிய நோக்கோடு தொடங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாது சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் நலனுக்காகவும் தற்போது செயலாற்றி வருகிறது நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

  • நம்பிக்கை வாசல் டிரஸ்டின் செயல்பாடுகள் என்னென்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வியல் தேவைகளை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற வழிகாட்டல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச பிசியோதெரபி பயிற்சி வழங்குதல், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இலவச மாலை நேர படிப்பு மையம் நடத்துதல், “பசியில்லா சேலம்” திட்டம் மூலமாக சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயஉதவிக் குழு தொடங்கி நடத்தி வருதல், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய உரிய வழிகாட்டுதல் செய்வதோடு சுயதொழில் தொடங்க தேவையான நிதியுதவி செய்து வருதல், இயலா நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீல்சேர், க்ரச்சஸ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவதோடு அவர்கள் சுயதொழில் புரிய தேவையான தொழில் உபகரணங்களையும் வழங்கி வருதல் என்று பல வகைகளில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  • டிரஸ்ட்டின் செயல்பாடுகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடையே உள்ள வரவேற்பு எப்படி இருக்கிறது?

தங்களுக்குள்ள உடற்குறைகளை எண்ணி வாழ்க்கையில் முடங்கிவிடாமல், தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையால் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் அத்தனை செயல்பாடுகளிலும் பங்கேற்பதோடு அதை தங்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி உரிய பலன்களையும் பெற்று வருகின்றனர்.

  • மாற்றுத்திறனாளிகளின் தேவைகளாக நீங்கள் கருதுவது என்ன?

எல்லா மனிதர்களுக்கும் விரும்பும்படியான வாழ்க்கை அமைவதில்லை. விருப்பங்கள் நிறைவேறாத தருணங்களில் மனம் உடையும் மனிதர்களுக்கிடையே வாழ்க்கையே சவாலாக வாய்க்கப் பெற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் உடனிருந்து ஊக்குவித்து நம்பிக்கை அளிக்கும் நல்ல மனிதர்களைத் தான். அத்தகைய துணை கிடைப்பவர்கள் சாதனையாளர்களாக உருவெடுத்து வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கக் கூடிய நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு மட்டுமின்றி அவரைப் போன்றிருக்கும் சக மாற்றுத்திறனாளிக்கும் ஊக்க சக்தியாக அமையும் என்பதே தனிச்சிறப்பு. இதுதான் மாற்றுத்திறனாளிகளின் தேவையாக இருக்கிறது.

  • நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகளுக்கு நிதியுதவி கிடைப்பது பற்றி…

சமூகநலனுக்கும் சகமனிதர்கள் மேம்பாட்டிற்கும் தங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் குறித்து கேள்விப்படுபவர்கள் என அத்தனை பேரும் தானாக முன்வந்து நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் தொடர தங்களால் இயன்ற பொருளுதவி செய்து வருகின்றனர். இதுவே நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முழுமுதற் காரணமாக விளங்குகிறது.

  • நம்பிக்கை வாசல் டிரஸ்டின் எதிர்காலத் திட்டம் பற்றி…

தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற நம்பிக்கை வாசல் டிரஸ்ட் தனது நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய நிரந்தரமான இடம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நல்லுள்ளம் படைத்தவர்களின் ஆதரவினால் எதிர்காலத்தில் நிரந்தர இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மாற்றுத்திறனாளிகளின் நலன் மட்டுமல்லாது, கைவிடப்பட்ட முதியோர்களுக்கான முதியோர் இல்லம் ஒன்றையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் இல்லம் ஒன்றையும் தொடங்கி நடத்துவதற்கு நம்பிக்கை வாசல் திட்டமிட்டிருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகைப்பட்ட தொழிற்பயிற்சிகளை வழங்கும் நிரந்தரமான களம் ஒன்றையும் உருவாக்கிட எண்ணியுள்ளது. ஏனெனில், பசியுள்ள மாற்றுத்திறனாளிக்கு மீன் பிடித்து கொடுப்பதைவிட, மீன் பிடிக்க தூண்டில் தர முனைகிறது நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

சமூகநலனுக்கான சரியான திட்டமிடல்களுடன் செயலாற்றி வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்டின் நற்பணிகள் தொடர நாமும் வாழ்த்துவோம்… இயன்ற வரை துணை நிற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =