கல்விச்சான்றிதழ்

சேலம் கன்னங்குறிச்சியில் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச மாலைநேரப் படிப்பு மையத்தில் கடந்த இரண்டாண்டுகளாக பயின்று வரும் 30 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பொங்கல் திருநாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பொங்கல் விழாவின் பெருமை குறித்தும், தமிழர் திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பேசப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர் திரு இரா.பூபதி அவர்கள் பேசும்போது, “கல்வியை விளையாட்டாகக் கற்றுக்கொள்வது வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் பயனளிக்கும். மேலும், கல்வி என்பது தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க கூடியதும், வருங்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதுமாக அமைகிறது. அந்தவகையில் ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய வாழ்நாளின் முதல் 25 ஆண்டுக் காலங்களை கல்வி கற்க முழுமையாகச் செலவிட வேண்டும்” என்று பேசினார்.


இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த தொழிலதிபர் திரு ஏ.ஆர்.முத்துராமன் அவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து பேசும்போது, “நம்முடைய கலாச்சாரங்களையும், நம்முடைய அடிப்படைகளையும் நாம் மறந்து விடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் இந்த அரசுப்பள்ளி பிள்ளைகளின் வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக தன்னுடைய பெருமுயற்சியின் விளைவாக, நம்பிக்கை வாசல் டிரஸ்ட்டை நிறுவி, அதன் மூலமாக 30 அரசுப்பள்ளி மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் ஏகலைவன் பாராட்டுக்குரியவர்” என்று பேசினார்.


நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நிறுவனத் தலைவர் கவிஞர் ஏகலைவன் நிகழ்விற்கு தலைமையேற்க, பொருளாளர் திரு கார்த்திக், துணைச்செயலாளர் திரு ஷாஜஹான் ஆகியோர் ஒருங்கிணைக்க, இந்த விழாவில் மாணவ மாணவியர்களிடையே  சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதுடன் கபசுரக் குடிநீர் தரப்பட்டது.

மேலும், இவ்வமைப்பின் இலவச மாலை நேர படிப்பு மையத்தில் சிறப்பாக பயின்ற மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ், நம்பிக்கை வாசல் காலண்டர், நோட்டுப் புத்தகங்கள், குறிப்பேடு போன்றவை வழங்கப்பட்டன.


அத்துடன் பொங்கல் திருநாளை நினைவுபடுத்தும் விதமாக, இனிப்பு பலகாரங்களும் வழங்கப்பட்டு, புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான அரசுப்பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்று பயனடைந்தனர்.