நம்பிக்கை வாசல் டிரஸ்ட்

“அன்பின் வழியது உயிர்நிலை” என்பார் திருவள்ளுவர். தான் சார்ந்துள்ள சமூகத்தையும் தன்னை சுற்றி உள்ள மனிதர்களையும் நேசித்து அன்பைப் பொழிவது நல்ல இதயங்களின் இயல்பு.

சமூகத்தையும் மனிதர்களையும் நேசிப்பது மட்டும் அன்றி நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்வது நம்மை உயர்த்திக் கொள்வதற்கான மற்றும் ஓர் வழி. இதையே “ஊருக்கு உழைத்தல் யோகம்” என்கிறார் மகாகவி பாரதியார்.

“இந்த சமூகத்தில் உதவியை நாடி நிற்பவர்களுக்கு உன்னாலான உதவியைச் செய்து பார் நீ இறந்த பின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதிலேயே உன் கண்முன் காண முடியும் “என்கிறது ஒரு பொன்மொழி. இப்படி தன்னாலான உதவிகளை இந்த சமூகத்திற்கும் மனிதர்களுக்கும் செய்ய வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் உருவானதே நம்பிக்கை வாசல் டிரஸ்ட்.

சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் இனிய தொடக்க விழா 2013 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நாமக்கல் மாநகரில்  நடைபெற்றது.

இவ்வினிய விழாவில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் சென்னை ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் நிறுவனர் திரு வி கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பை துவக்கி வைத்தார்.

சேலத்தை மையமாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த சமூகப் பணிகளை செயல்படுத்துவதற்காக 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நம்பிக்கை வாசல் டிரஸ்ட் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவிகள், ஊன்றுகோல்கள், காதொலி கருவிகள், உபகரணங்கள், சுய தொழிலுக்குரிய உதவிப் பொருட்கள், அரசின் உதவிகள் பெற வழிகாட்டல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் முனையும் பயிற்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்குகள், ஏழை மாணவர்களுக்கான இலவச மாலைநேர படிப்பு மையம் என்பன போன்ற பல சமூக பணிகளை ஆற்றி வருகின்றது.

கவிஞர் ஏகலைவன் – நிறுவனர்

சேலத்தைச் சேர்ந்த கவிஞர் ஏகலைவன் ஓர் மாற்றுத்திறனாளி. கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூகநல செயற்பாட்டாளர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

தனது 13வது வயதில் ஏற்பட்ட ரயில் விபத்து ஒன்றில் ஒரு காலையும் இடது கை சுண்டு விரலையும் இழந்த இவர் ஓர் மாற்றுத்திறனாளி. ஆனாலும் தன் மனதில் உள்ள நம்பிக்கையை இழக்காமல் வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொண்டு மெல்ல மெல்ல உயர்ந்து தையல் கலைஞராக பணி செய்து வந்தார். தன்னுடைய தொடர் முயற்சியாலும் ஆர்வத்தாலும் புத்தகங்கள் மீது கொண்ட காதலால், தான் செய்து வந்த தையல் தொழிலை விடுத்து 2004ஆம் ஆண்டு வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை தொடங்கினார். இந்த பதிப்பகத்தின் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கவும் அடையாளப்படுத்தவும் வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதில் இவரது பங்கும் உண்டு.

சாதனையாளரான கவிஞர் ஏகலைவன் அவர்கள் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களை சந்தித்து அவர் தம் சாதனைகளை இந்த உலகுக்கு உணர்த்த பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கவிதை நூல்களையும், சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வாழ்வியல் வழிகாட்ட தன்னம்பிக்கை நூல்களையும் எழுதியுள்ளார்.

இதுவரை 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்று தன்னம்பிக்கை பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறக்கட்டளை நிறுவனராகவும் வலம் வருகிறார்.

தன்னுடைய வாசகன் பதிப்பகத்தில் பல்வேறு படைப்பாளர்களின் நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், அவற்றுள் மாற்றுத்திறனாளிகளின் நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், பதிப்பகத்தின் பணி வாய்ப்புகளை கூட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் சிறப்புக்குரியது.

நம்பிக்கை வாசல் டிரஸ்ட்

நோக்கங்கள்

தற்போதைய பணிகள்

  • மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வாழ்வில் முன்னேறவும், தங்களின் திறமைகளை கண்டறிந்து வாழ்வை சுயமாக எதிர் கொள்ளவும் உரிய வழிகாட்டல்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், காதொலி கருவிகள், பிற உபகரணங்கள் போன்றவை வழங்குதல்.

  • மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழிலுக்கு உரிய பயிற்சிகள், உதவிப் பொருட்கள் வழங்குதல். அரசின் உதவிகள் பெற வழிகாட்டுதல்.
  • அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மாலை நேரத்தில் தனிப் பயிற்சி பெற படிப்பு மையம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துதல்
  • மாற்றுத்திறன் படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பரிசுத்தொகை உடனான விருதளித்து கௌரவித்தல்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியல் பயிற்சிகளை வழங்குதல்.
  • ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில நிதியுதவி வழங்குதல்


எதிர்காலப் பணிகள்


  • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான டேகேர் சென்டர் அமைத்தல்.

  • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிப் பயிற்சிப் பள்ளி ஒன்றை அமைத்தல்.

  • மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் கொண்ட சிறப்பு உடற்பயிற்சி மையம் அமைத்தல்.
  • மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும் வகையிலான கணினி பயிற்சி மையம் அமைத்தல்.

  • உடற்குறை இருந்தாலும் மனதால் பலமுடைய மகளிருக்கான தையல் பயிற்சி மையம் அமைத்தல்.

  • தவழும் நிலையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் தரும் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழில் அமைத்துத் தருதல், தொழிற் பயிற்சி தருதல்.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பேப்பர் பிளேட், பாக்குமட்டை பொருட்கள் தயாரித்தல்.