நம்பிக்கை இல்லம்

நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் “நம்பிக்கை இல்லம்” – மாற்றுத்திறனாளர் மறுவாழ்வு பயிற்சி இல்லம் & இலவச மாலை நேர படிப்பு மையம் திறப்பு விழா கன்னங்குறிச்சி பகுதியில் இன்று (17.5.19) காலை நடைபெற்றது.

இந்த விழாவில் எழுத்துச் செல்வர் கலைமாமணி லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்து கொண்டு நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நம்பிக்கை இல்லத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய கலைமாமணி எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன் அவர்கள், “என் சீடர்களியே முதன்மையானவர்கள் மூவர். அந்த மூவருள் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர். மாற்றுத்திறனாளியான கவிஞர் ஏகலைவன் தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள படைப்பாற்றலை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு சாதித்து வருகிறார். அவர்களிடம் உள்ள திறமைகளை உலகிற்கு அடையாளங்காட்ட நம்பிக்கையை விதைத்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வியல் தேவைகளை தாங்களே செய்து கொள்ளவும், அவர்கள் வாழ்வில் சாதித்து வெற்றி பெறவும் அவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பை நிறுவினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கோடு தற்போது ஏழை மாணவர்களுக்காக இலவச படிப்பு மையத்தையும் இணைத்து நல்ல நோக்கங்களுக்காக தொடங்கப்பட்டுள்ள நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நம்பிக்கை இல்லம் மென்மேலும் வளரவும் மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் சேவை செய்யவும் வாழ்த்துகிறேன்.

முதியோர் இல்லங்கள் குறைய வேண்டும். அவர்களை நம் இல்லங்களிலேயே வைத்து அவரவர் பிள்ளைகள் பேணி பாதுகாக்க வேண்டும். ஆனால், இது போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய நம்பிக்கை இல்லங்கள் நாடெங்கும் பெருகி மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவிகள் சென்று சேர வேண்டும். அது சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும்.

எனவே நம்மாலான உதவிகளை இதுபோன்ற நம்பிக்கை இல்லங்களுக்கு செய்து சமூகம் மேம்பட நாமும் பங்களிக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்த இனிய விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் நன்றி கூறினார்.

இந்த விழாவில் கவிஞர் ச. கோபிநாத், நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் அங்கத்தினர்களான திருமதி A.வஹிதா பானு, திரு ஷாஜஹான், திரு கார்த்திக் ஆகியோர் மற்றும் திரளான பொதுமக்களும், மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.